கேமிங் மற்றும் சமூக ஊடக நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் மின்கல தயாரிப்பாளரான CATL உட்பட பல சீன தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா, சீனாவின் இராணுவத்துடன் இணைந்து செயல்படும் வணிகங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
திங்களன்று (06) வெளியிடப்பட்ட ஆவணத்தின்படி, இந்த பட்டியலில் சிப் தயாரிப்பாளரான சாங்சின் மெமரி டெக்னாலஜிஸ், குவெக்டெல் வயர்லெஸ் மற்றும் ட்ரோன் தயாரிப்பாளரான ஆடெல் ரோபாட்டிக்ஸ் ஆகியவையும் அடங்கும்.
சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்த பட்டியல் ஒரு எச்சரிக்கையாக அமைகின்றது.
பட்டியலுக்கான புதிய இணைப்பானது குறித்த நிறுவனங்களுக்கு உடனடியாகத் தடையை ஏற்பாடுத்தாது என்றாலும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க திறைசேரி துறைக்கு அழுத்தம் கொடுக்கும்.
டென்சென்ட் மற்றும் CATL ஆகியவை சீன இராணுவத்துடன் தொடர்பு எதையும் பேணவில்லை என்று மறுத்துள்ளன.
அதே நேரத்தில், இந்த முடிவானது சீன நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடக்குவதாக பீஜிங் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் (DOD) சீன இராணுவ நிறுவனங்களின் பட்டியல், முறையாகப் பிரிவு 1260H பட்டியல் என அழைக்கப்படுகிறது.
இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு இப்போது 134 நிறுவனங்களை உள்ளடக்கியது.
இந்த நிலையில் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிகவும் மோசமாக உள்ள நிலையில் மேற்கண்ட செய்தி வந்துள்ளது.
இதற்கிடையில், சீனாவுக்கு எதிராக முன்னர் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.