தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய திருத்த சட்டமூலத்தை கடந்த 10ஆம் திகதி தாக்கல் செய்தார்.
2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டமூலத்தை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்று இருந்தன.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் திருத்த சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த திருத்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்த சட்டமூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் திருத்த சட்டமூலத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். திருத்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.