‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் ‘இரும்பின் தொன்மை நூல் வெளியீடு, கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தல்’ போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழக தொல்லியல் துறையானது தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பல்வேறு அகழாய்வுகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 4.48 ஏக்கர் பரப்பளவில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்படவுள்ளது.
இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விழாவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் கட்டடக் கலைப் பாணியைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது 1) வைகை மற்றும் கீழடி 2) வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை 3) கலம் செய் கோ 4) ஆடையும் அணிகலனும் 5) கடல்வழி வணிகம் 6) வாழ்வும் வளமும் ஆகிய ஆறு கருப்பொருட்களின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளவும் பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்டுகளிப்பதற்காக மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டு கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.