பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று (22) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பழங்குடியின மக்களின் வரலாற்றுப் பெறுமதியை விளக்கிய அதன் தலைவர் உருவரிகே வன்னியாலத்தோ தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி தயாரிக்கப்பட்ட பழங்குடியினர் உரிமைச் சட்டம் குறித்தும், பழங்குடியினர் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விளக்கமளித்த பழங்குடியின தலைவர், கடந்த அரசுகள் சில நடவடிக்கைகள் எடுத்தாலும், அவர்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பழங்குடியின மக்கள் நாட்டின் வரலாற்றுச் சொத்து என்றும், அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது என்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி இதன்போது தெரிவித்தார்.
பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட விதிமுறைகளை சுற்றாடல் அமைச்சு உடனடியாக நடைமுறைப்படுத்துமென தம்மிக்க படபந்தி தெரிவித்தார்.
அதற்கான சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல் அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியினருக்கும் ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை குறைக்க நிலவும் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அடுத்த மூன்று மாதங்களில் பழங்குடியினரின் உரிமைகளை வென்றெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபாண்டி, கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் பலகல்ல, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரியபண்டார மற்றும் சுற்றாடல் மற்றும் மாற்றுக் கொள்கை அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.