அமெரிக்காவில் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்றுவீச்சு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.
மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை பனி மூடியது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது. அங்கு 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனால் அந்த நாட்டின் பாடசாலை, கல்லூரிகள் மூடப்பட்டன, வீதி மற்றும் ரயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால் 2 ஆயிரம் விமானங்கள் இரத்தாகின. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர். 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.