கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.















