வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை.
தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்டதாரி சொன்னார். இவர்களில் 80 வீதத்திற்கும் குறையாதவர்கள் எங்கேயோ ஒரு தனியார் துறையில் ஏதோ ஒரு வேலையைச் செய்கிறார்கள். சிலர் நல்ல சம்பளத்துக்கும் வேலை செய்கிறார்கள். வேலை தேடும் பட்டதாரிகளின் ஒன்றுகூடல்களில் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம். அங்கே முப்பது வயதைக் கடந்தவர்களும் உண்டு.அதாவது பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகிறார்கள் என்று பொருள்.அவர்களுக்கும் வயது ஏறிக்கொண்டு போகிறது. வேலை தேடித் தேடி வயதுகள் வீணாகிவிட்டன.
ஆனால் அவர்கள் எந்த வேலையைத் தேடுகிறார்கள்? அரச உயர் அதிகாரியான எனது நண்பர் ஒருவர் சொல்வார், அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைக்கக்கூடாது. “அரச வேலையற்ற பட்டதார்கள்” என்றுதான் அழைக்க வேண்டும் என்று.ஏனென்றால் அவர்கள் அரச வேலைக்காகத்தான் போராடுகிறார்கள். தனியார் துறையில் வேலை செய்வதற்கோ அல்லது தாமாக ஒரு தொழில்துறையை தொடங்குவதற்கோ தயாரில்லை என்றும் அவர் கூறுவார்.
அவர்கள் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் என்று கேட்டால்,அதற்கும் அவர் பதில் சொல்வார். ஏனென்றால் அது சுகமானது. கஷ்டப்படத் தேவையில்லை. தடைதாண்டல் பரீட்சைகளின்மூலம் பதவி உயர்வுகளைப் பெறலாம். கஷ்டப்பட்டு வேலை செய்து பதவி உயர்வுகளைப் பெற வேண்டிய தேவை இல்லை. பணி நேரத்தில் ஓய்வாக இருக்கலாம். ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் என்ற சலுகைகள் கிடைக்கும். எனவே ஒப்பீட்டளவில் ரிஸ்க் இல்லாத, கஷ்டப்படுத்த தேவையில்லாத, பாதுகாப்பான பிற்காலத்தைக் கொண்ட ஒரு தொழில், என்பதனால் பெரும்பாலானவர்கள் அரச ஊழியத்தை நாடுகிறார்கள் என்று எனது நண்பர் சொல்வார்.
ஆனால் அரசு ஊழியத்தின் தொடக்க காலம் அப்படியொன்றும் செழிப்பானதோ மகிழ்வானதோ அல்ல.யாழ்ப்பாணத்தில் ஓர் அரசு ஊழியருக்கு முதலில் கிடைக்கும் நியமனம் பெரும்பாலும் தூரப் பிரதேசங்களுக்கே கிடைக்கும். தூர மாவட்டங்களுக்குத்தான் கிடைக்கும்.கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அங்கே அவர் சேவை புரிய வேண்டும்.அரசியல் செல்வாக்கு இருந்தால் தீவுப் பகுதிக்கோ அல்லது பளைப் பிரதேசத்துக்கோ நியமனத்தை எடுக்கலாம்.ஆனால் அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இவ்வாறு 8 ஆண்டுகள் கட்டாயமாக கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்யவேண்டி வரும்பொழுது,அது முதல் நியமன அனுபவத்தை துன்பகரமானதாக மாற்றுவதுண்டு.
தூர மாவட்டத்தில் அங்குள்ள அரச ஊழியருக்கான விடுதியில் தங்கினால் அது வேறு விடயம். அதல்லாமல் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வேலைக்குப் போய் மாலையில் வருவது என்று சொன்னால் அது மிகத் துன்பம்.வேலை வெறுக்கும் அளவுக்குத் துன்பம். அதிகாலையில் எழ வேண்டும். எழுந்தால்தான் அரச ஊழியர்களுக்கான பஸ்ஸைப் பிடிக்கலாம்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது கிட்டத்தட்ட நான்கு மணிக்கு மேல் ஆகிவிடும். அது நியமனம் கிடைத்த இடத்தின் தூரத்தைப் பொறுத்த விடயம்.
இவ்வாறு நியமனம் கிடைத்த அதே காலப்பகுதியில்தான் பெரும்பாலும் திருமணமும் நடக்கும். திருமணம் செய்த நபரும் முதல் நியமனம் பெறும் அரசு ஊழியர் என்றால் தேனிலவுக் காலம் பயணத்திலேயே கழியும்.காலையில் எழுந்து பரக்கப்பரக்க ஓட வேண்டும்.காலையில் எழுவதற்காக இரவு முன்கூட்டியே நித்திரைக்குப் போக வேண்டும்.புதுமணத் தம்பதிகள் உல்லாசமாகத் திரிவதற்கு கிடைக்கும் நேரம் மிகச் சில மணித்தியாலங்கள்தான்.அதற்குள் பிள்ளையைப் பெற்றால் அது அடுத்த துன்பம்.பிள்ளையைப் பராமரிக்க அம்மம்மா,அப்பம்மா யாராவது இல்லையென்றால், அதற்கு வேலைக்கு ஆள் தேட வேண்டும். அநேகமாக ஆட்கள் கிடையாது. வேலை நேரத்தில் பிள்ளையின் முகம் அல்லது துணையின் முகம் கண்ணுக்கு முன்வரும்.அது வேலை செய்யவிடாது. இப்படித்தான் 8 ஆண்டுகளும் கழியும்.
பொதுவாக திருமணத்தை உடனடுத்து வரும் காலப் பகுதியானது வாழ்வில் மகிழ்ச்சியாக,ஃப்ரீயாகக் கழிக்க வேண்டிய ஒரு காலம். ஆனால் முதல் நியமனம் பெறும் நகரப் பகுதி அரசு ஊழியர்களுக்கு அதுதான் துன்பகரமான, வெறுப்பான ஒரு காலமாகவும் அமைவதுண்டு.குடும்பத்தைப் பிரிந்து பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.எந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டுமோ அதே காலகட்டம் பயணத்தில் கழிந்து போகும்.அந்த அரசு ஊழியர் மகிழ்ச்சியான அரசு ஊழியராகவும் இருக்கப் போவதில்லை;மகிழ்ச்சியான குடும்பத் தலைவராகவோ தலைவியாகவோ இருக்கப் போவதும் இல்லை.
படிப்பு எதற்கு? பட்டம் எதற்கு? தொழில் எதற்கு? மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தானே?ஒரு தம்பதி மகிழ்ச்சியாக உல்லாசமாகக் கழிக்க வேண்டிய காலத்தில் பெரும் பகுதியை பயணத்தில் கழிப்பது என்பது வாழ்க்கையின் பொருளை, கல்வியின் பொருளைக் கேள்விக்கு உள்ளாக்கும்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் நியமனம் பெறும் பெரும்பாலான அரசு ஊழியர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.அந்த எட்டு ஆண்டுகளையும் பல்லைக் கடித்துக்கொண்டு கடந்துவிட்டால் அதன் பின் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.
இவ்வாறாக அரச ஊழியத்துக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளின் தொகை ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.ஆனால் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் புதிய நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே போகின்றன.
இது ஒரு காட்சி.இதற்கு நேர் எதிரான மற்றொரு காட்சி உண்டு. 3000த்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைகேட்டு போராடும் ஒரு நாட்டில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை.
நான் வாழும் கிராமத்தில் படித்தவர்கள், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உண்டு. ஆனால் இங்கு கூலி வேலைக்கு ஆள் கிடையாது. முன்பு ஒரு முதியவர் இருந்தார்.அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.ஒரு கோவில் தாழ்வாரத்தில் உறங்குவார். அவரை வேலைக்கு பிடிப்பதே கஸ்ரம். வேலைக்கு வந்தாலும் அவருக்கு விருப்பமான நேரம்தான் வருவார்.விரும்பின வேலையைத்தான் செய்வார்.அதிகம் சாப்பிடமாட்டார்.அவரும் ஒரு கடுமையான மழை நாளில்,கோவில் தாழ்வாரத்தில் இறந்துவிட்டார். இப்பொழுது வேலைக்கு ஆட்கள் இல்லை. கூலி வேலைக்கும் துப்புரவு வேலைகளுக்கும் தேங்காய் பிடுங்குவதற்கும் ஆட்கள் இல்லை.தேங்காய் பிடுங்குவதற்கு முன்பு கேட்கப்பட்ட கூலி சில தேங்காய்கள். இப்பொழுது ஒரு மரத்துக்கு 300 ரூபாய். அது பரவாயில்லை. ஏனென்றால் ஒரு பெரிய தேங்காய் 200 ரூபாய்க்கு மேல் போகிறது.
ஒருபுறம் ஆயிரக்கணக்கான பட்டப்பட்டதாரிகள் வேலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், கூலி வேலைகளுக்கு, சாதாரண சிறிய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை.முதியவர்களைப் பராமரிக்க, இயலாதவர்களைப் பராமரிக்க, சமைக்க, வீட்டு வேலைகளைச் செய்ய, பிள்ளை பெற்ற பெண்ணைப் பராமரிக்க,ஆட்கள் இல்லை.
இதற்கு அரசாங்கம் மட்டும் பொறுப்பல்ல.தொழில் தொடர்பாக,தொழில் ஸ்தலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது தொடர்பாக,தொழில் பாதுகாப்பு தொடர்பாக,தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் அளவுகோள்களும் நம்பிக்கைகளும்கூட இதற்குக் காரணம்தான்.
அவ்வாறு அரசு ஊழியத்துக்காக காத்திருக்கும் பட்டதாரிகளைத் தயார்ப் படுத்திய கல்விமுறையும் பல்கலைக்கழகங்களும் காரணம்தான்.அரச தொழில்துறைக்கு வெளியே தாமே சுயமாக தொழில் துறைகளை தொடங்கத் தேவையான தொழில் முனைவோர்களை நமது கல்விமுறை உற்பத்தி செய்ய தவறிவிட்டதா?
ஒருபுறம் சாதி சார்ந்த தொழில் பிரிவுகள்.இன்னொரு புறம் தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி.யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகங்கள் மத்தியில் இருந்துவரும் பட்டதாரிகள் கடற்தொழிலை திரும்பிப் பார்ப்பதில்லை.அதுபோல வலிகாமத்தின் மையப் பகுதிகளில் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்த பட்டதாரிகள் விவசாயத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை.ஆனால் வன்னியில் பெரும்பாலான பட்டதாரிகள் விவசாயத்தை ஒரு உப தொழிலாக மேற்கொள்வார்கள்.
முதலீட்டுத் துறையைச் சேர்ந்த ஒரு விற்பனர் ஒருமுறை என்னிடம் கேட்டார், ஒரு வாகனம் திருத்துபவரின் மகன் முகாமைத்துவப் பட்டதாரியாக வந்தபின் தன்னுடைய தகப்பனின் சிறிய வாகனம் திருத்தும் கடையை பெரிய அளவில் விஸ்தரித்து முகாமைத்துவம் செய்வதற்கு முயற்சிப்பதில்லை.அவர் தன் தகப்பனின் தொழிலைத் திரும்பிப் பார்க்காத ஒரு நிலைமைதான் உண்டு.
ஒருபுறம் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஒரு புதிய தலைமுறை தமது பரம்பரை தொழிலை கைவிடுகின்றது. அதில் ஒரு நியாயம் உண்டு. அதே சமயம் அந்த தொழில்களை நவீனமாக்கி எந்திரமயப்படுத்துவதன்மூலம் அவற்றின் சாதி அடையாளங்களை அகற்றலாம். ஆனால் கல்விமுறை அதற்கு வேண்டிய தொழில் தரிசனங்களைக் கொடுக்கவில்லை.
புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் காசும் இந்த விடயத்தில் இளையவர்களைக் கெடுக்கிறது என்று ஒரு மதகுரு சொன்னார்.ஆனால் 2009க்கு உடனடுத்த ஆண்டுகளில் அவ்வாறு உதவிய பலரும் இப்பொழுது உதவுவதில்லை. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் நிதி உதவிகளை வைத்துத் தொழில் முனைவோராக மேலெழுந்த பலர் உண்டு.இங்கு பிரச்சனை என்னவென்றால், இவை எவையும் ஒரு மையத்தில் இருந்த திட்டமிடப்படாத உதிரிச் செயற்பாடுகளே.
இப்பொழுது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் படித்தவர்கள், பட்டதாரிகள், நல்ல தொழில் பார்த்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் ஒரு பகுதியினர் திரும்பி வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் வெளியேறத் துடிக்கும் அனைவரும் வாழ்க்கை இங்கு கடினமானது, மகிழ்ச்சியற்றது என்று கருதுகிறார்கள் என்பது மட்டும் உண்மை. அல்லது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழ்க்கை ஒப்பீட்டளவில் வசதியானது, பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழ்த் தேசியவாத கட்சிகளிடம் இது தொடர்பான பொருத்தமான பொருளாதாரத் தரிசனங்கள் இல்லை.அவர்களுக்கு தேசியவாத அரசியல் என்றாலே என்ன என்று தெரியவில்லை. ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பொருளாதாரம் ஆகும். ஆனால் தமிழ்க் கட்சிகளில் யாரிடமாவது பொருத்தமான பொருளாதாரத் தரிசனங்கள் உண்டா? இல்லை.ஒருபுறம் நல்ல பதவிகளை வகிக்கும் பட்டதாரிகள் புலம் பெயர்கிறார்கள்.இன்னொருபுறம்,வேலை கேட்டுப் போராடும் பட்டதாரிகள். அதேசமயம் கூலி வேலைக்கு ஆள் இல்லாமல்,முதியோரை, இயலாதவர்களைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல்,சமைப்பதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள்.ஒரு தேசமாகத் தமிழ் மக்கள் தமது பொதுப் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்பப் போகிறார்கள்?