சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் செவ்வாயன்று (04) அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்தது.
இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்தது.
ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10% வரி அமெரிக்காவிற்குள் அனைத்து சீன இறக்குமதிகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 (0501 GMT) மணிக்கு அமுலுக்கு வந்தது.
இது அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் சீனாவின் நிதி அமைச்சகம், அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று கூறியது.
அமெரிக்க ஏற்றுமதிக்கான புதிய கட்டணங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கும் என்றும் சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் (GOOGL.O)ஏகபோகத்திற்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதாகவும் சீனா கூறியது.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம் மற்றும் மாலிப்டினம் மற்றும் ருத்தேனியம் ஆகிய தனிமப் பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அதன் சுங்க நிர்வாகமும் தனித்தனியாக தெரிவித்தன.
தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு முக்கியமான இத்தகைய அரிய தனிமங்களின் உலகளாவிய விநியோகத்தின் பெரும்பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது.
ட்ரம்ப் திங்களன்று மெக்சிகோ மற்றும் கனடா மீதான தனது அச்சுறுத்தலான 25% வரிகளை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைத்தார்.
இரு அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் குற்ற அமலாக்கத்திற்கான சலுகைகளுக்கு ஈடாக 30 நாள் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் சீனாவிற்கு அத்தகைய வரி நிவாரணம் எதனையும் அவர் அறிவிக்கவில்லை.
மேலும், இந்த வாரத்தின் பிற்பகுதி வரை ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச மாட்டார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.