ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக அவுஸ்ரேலிய அணியின் சகலதுறை வீரரான மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அறிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய அணியின் முன்னனி சகலதுறை வீரரான மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் தீடிரென ஒருநாள் போட்டிகளில் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் இதனை கிரிக்கெட் அவுஸ்ரேலியா உறுதிசெய்துள்ளது.
வருகின்ற 19ம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண அவுஸ்ரேலிய அணியில் ஸ்டொய்னிஸ் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் தீடிரென தான் ஓருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வருகின்ற 12ம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதி அணித்தேர்வில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸிற்கு பதிலாக மாற்றுவீரரை அவுஸ்ரேலிய அணி அறிவிக்கவுள்ளது. அத்துடன் ஒருநாள் அணியிலிருந்து மாத்திரமே தான் ஓய்வு பெறுவதாகவும் தொடர்ந்தும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தற்போது தென்னாப்பரிக்காவில் நடைபெற்றுவரும் பிராந்திய கழகமட்ட போட்டிகளில் டர்பன் சூப்பர் ஜயன்ட் அணிக்காக விளையாடிவரும் ஸ்டொய்னிஸ் கடந்த போட்டியில் தொடையில் காயம் ஏற்பட்டமையால் வருகின்ற சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறவுள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருந்தும் இதுவரை காலமும் அவுஸ்ரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தருணம் என் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத ஞாபகங்கள், பச்சை மற்றும் தங்க உடையில் நான் ஜொலித்த தருணங்கள் என்றும் என்னைவிட்டு நீங்காது, அனைவரும் கொடுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்ரேலிய அணிக்காக 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1495 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதோடு 146 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டுள்ளார். அதேநேரம் 48 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடதக்கது.