கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.
கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக, புனித நீராடுவதற்கு உரிய நேரத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்கு பக்தர்கள் செல்ல முடியாமல் நகரமே முடங்கியுள்ளது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையமும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சங்கம் சாலையில் வரிசையாக நிற்பதையும், பக்தர்கள் சிரமமின்றி நடமாடுவதற்காக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்வதையும் காண முடிந்தது.
மகா கும்பாபிஷேகம் ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கியதில் இருந்து இதுவரை 43 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 1.42 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.