நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த கப்பல் சேவையானது ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் சீரற்ற வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குறித்த கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் தீர்மானிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.