நாட்டில் இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 வீத வரிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மறைமுக வரிகளைக் குறைப்பது காலப்போக்கில் செய்யப்பட வேண்டும் எனவும், ஏனெனில், இந்த ஆண்டுக்குள் வரி குறைப்பை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த செயல்முறையிலிருந்து நாம் மீண்டு, வருவாய் வசூலின் செயல்திறன் அதிகரிக்கும் போது, அந்த மானியங்களை அந்தத் தொழில்களின் தயாரிப்புகளுக்குத் திருப்பித் தரும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விசேடமாக வங்கித் துறை மற்றும் தொழில்களின் தொழிநுட்ப முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளை வழங்க புதிய அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எதிர்வரும் 17 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டத்தில் இதனையெல்லாம் காணலாம் எனவும், வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, தொழில்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆதரவை வழங்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளில் தொழில்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கைத்தொழில்களுக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் போது புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.