இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சுவிட்சர்லாந்து போன்று இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசின் அதிகபட்ச உதவிகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுவிட்சர்லாந்து தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இது ஒரு வரலாற்று திருப்பம் என்றும் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மின் நுகர்வு மற்றும் மின் உற்பத்தியே இடையே ஏற்பட்ட சமநிலையின்மையே இந்த மின் தடைக்கு காரணம் என்றும் விளக்கமளித்தார்.
எனவே, மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அவர்களும் என்னுடன் கலந்து கொண்டார்.