2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் மது அருந்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இங்கிலாந்திற்கான ரியாத்தின் தூதர் புதன்கிழமை (12) தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு செல்வோர் வளைகுடா நாட்டின் கலாசாரத்தை மதிக்க வேண்டும் என்றும், ஹோட்டல்கள் உட்பட நிகழ்ச்சியின் போது எங்கும் மது விற்கப்பட மாட்டாது என்றும் இளவரசர் காலித் பின் பந்தர் அல் சவுத் கூறியுள்ளார்.
2034 ஆம் ஆண்டு ஆடவர் உலகக் கிண்ணத்தை சவுதி அரேபியா நடத்தும் என ஃபிஃபா உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் LBC செய்திச் சேவையிடம் பேசிய சவுதி அரேபிய தூதுவர், போட்டிகள் நாங்கள் மதுவுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினார்.
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடந்த உலகக் கிண்ணத்தில் இருந்ததைப் போல, ரசிகர்கள் தங்களுடைய ஹோட்டல்களுக்குத் திரும்பியவுடன் மதுபானம் அருந்த முடியுமான என்று இங்கு கேள்வி எழுப்பப்பட்ட போது தூதுவர் “அதற்கும் அனுமதி இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.
வளைகுடாவின் மற்றொரு இஸ்லாமிய நாடான கட்டாரில் அண்மையில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முன்னதாகவே ரசிகர்கள் மதுவை வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
கட்டாரில் உள்ள மைதானங்களில் மது விற்பனையை அனுமதிக்கும் முடிவு, போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரத்து செய்யப்பட்டது.
இறுதியில், ரசிகர்கள் ஹோட்டல்கள் மற்றும் நியமிக்கப்பட்ட நிலையங்களில் மதுபானங்களை வாங்க முடிந்தது.
சவுதி அரேபியாவுக்குச் செல்லும் ரசிகர்களுக்கு மதுபானம் இல்லாதது வரவேற்கத்தக்கதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது தூதுவர், ஒவ்வொருவருக்கும் அவரவர் கலாச்சாரம் உள்ளது. மக்களை நமது கலாச்சாரத்தின் எல்லைக்குள் வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் எங்கள் கலாச்சாரத்தை வேறு ஒருவருக்காக மாற்ற விரும்பவில்லை – என்றார்.
இதனிடையே, சவுதி அரேபியாவில் உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்புகள் குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலைகளை எழுப்பியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஹோஸ்டிங் உரிமைகள் வழங்கப்படுவதற்கு முன்பு, “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டலை எதிர்கொள்வார்கள், மேலும் பலர் இறக்க நேரிடும்” என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியது.
நாட்டில் LGBTQIA+ மக்கள் பாகுபாடு காட்டப்படுவார்களா என்பது கவலைக்குரிய ஒரு முக்கிய காரணமாகும்,
அங்கு ஒரே பாலின பாலியல் செயல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
உலகில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வில் ஓரினச்சேர்க்கை ரசிகர்கள் பாதுகாப்பாக கலந்து கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்த தூதுவர், “சவுதியில் உள்ள அனைவரையும் நாங்கள் வரவேற்போம்” என்றார்.