கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, குசல் மெண்டீஸின் சதம் மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்கவின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 101 (115) ஓட்டங்களையும், சரித் அசலங்க 78 (66) ஓட்டங்களையும், நிஷான் மதுஷங்க 51 (70) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
282 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கையின் பந்து வீச்சுக்களில் நிலை தடுமாறியது.
ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்த அவுஸ்திரேலியா இறுதியாக 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனால், இலங்கை அணி 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மாத்திரம் 29 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலாகே 4 விக்கெட்டுகளையும், அஷித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டீஸ் தெரிவானதுடன், சரித் அசலங்க தொடரின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.