நாட்டில் நிலவும் மிகவும் வறட்சியான காலநிலை இம் மாதம் முழுவதும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் எஞ்சிய நாட்களில் பல பிரதேசங்களில் வறட்சியான காலநிலையை எதிர்பார்க்கலாம்.
அதன் பின்னர் குறைந்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முந்தைய ஆண்டை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என திணைக்களத்துக்கு பொறுப்பான வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், எதிர்வரும் ஆண்டுகளில், புவி வெப்பமடைதலின் அதிகரிப்பு காரணமாக, வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த நாட்களில் மனித உடல் உணரும் வெப்பம் அதிகமாக உள்ளது.
கடந்த நாளின் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதன்படி அங்கு 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இது தவிர அனுராதபுரம் மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பு, கண்டி மற்றும் காலி மாவட்டங்களிலும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய நாளுக்கான வானிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான காலநிலையை எதிர்பார்க்கலாம்.
நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.