கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான கனேடியப் பெண்ணொருவர் ஹாஷிஷ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (15) இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் டொரேண்டோவில் இருந்து அபுதாபிக்கு பயணித்து அங்கிருந்து இலங்கை வந்துள்ளார்.
சர்வதேச புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் சந்தேக நபரின் பொருட்களை முழுமையாக சோதனை செய்தனர்.
இதன்போதே, அவரது இரண்டு சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 36.5 கிலோ கிராம் போதைப்பொருளின் பெறுமதியானது 360 மில்லியன் ரூபான என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போதைப்பொருளை வேறு நாட்டுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்கில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் (PNB) விமான நிலையப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.