பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ நகருக்கு அருகில் உள்ள, ‘பான்டெக்ஸ் பிளான்ட்’ என்ற பெடரல் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணியிலிருந்து திடீரென நிறுத்தப்பட்ட பலர், அணு ஆயுதத் திட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என்பதால் அமெரிக்காவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளதோடு ,எதிர்காலத்தில் அமெரிக்காவின் செயல்திட்டங்கள் குறித்த அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் கண்மூடித்தனமான செயல்பாட்டால் உள்நாட்டில் பல விதமான குழப்பங்கள் ஏற்படும் என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தன் முடிவை மாற்றியுள்ள ட் ரம்ப், பணியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.