ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அவர், 100,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுக்கப்பட்டார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக இந்தியாவைத் தளமாகக் கொண்ட கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீள் விசாரணையை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.