2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் லாகூர், கடாபி மைதானத்தில் சனிக்கிழமை (22) நடந்த அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
ஆஷஸ் போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்து தேசிய கீதத்தை இசைத்த பின்னர், அவுஸ்திரேலியாவின் தேசிய கீதத்துக்கு பதிலாக இந்தியாவின் ‘ஜன கன மன’ இசையை அமைப்பாளர்கள் இசைத்தனர்.
இந்தியாவின் கீதம் 2 வினாடிகளுக்கும் குறைவாகவே நீடித்தாலும், அந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை குற்றம் சாட்டியதாகவும், இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை கோரியதாகவும் ESPNcricinfo அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எதையும் பாகிஸ்தானில் விளையாட திட்டமிடப்படாததால், இந்த தவறு அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2025 சாம்பியன் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்பே, கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்தியக் கொடி இல்லாததற்காக ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரக்கெட் வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் எனத் தீர்மானித்தது.
இது ஒரு கலப்பின மாதிரியைக் கடைப்பிடிக்க அமைப்பாளர்களைத் தூண்டியது.
இதன் விளைவாக, இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும்.