நாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக இந்திய மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான மீனவர்கள் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு வடக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட படகுகளுடன் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு இதுவரை 131 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 18 இந்திய மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.