2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் சுற்று ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மீண்டும் போராடி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
லாகூரில் சனிக்கிழமை (22) நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி த்ரில் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய நட்சத்திரம் ஜோஷ் இங்கிலிஸ் முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
அவுஸ்திரேலியாவின் ஐந்து விக்கெட் வித்தியாச வெற்றி என்பது ஐசிசி ஒயிட்-பால் போட்டியில் எந்த அணியும் சேஸ் செய்த அதிகபட்ச சாதனையாக அமைந்தது.
இதற்கு முன் 2023 ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக 345 ஓட்டங்களை சேஸ் செய்திருந்தது.
352 என்ற இங்கிலாந்தின் மிகப்பெரிய இலக்கை துரத்திய அவுஸ்திரேலியா, பவர்பிளேயின் தொடக்கத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை இழந்தது.
மேத்யூ ஷார்ட் மற்றும் மார்னஸ் லாபுஷ்சாக்னே ஆகியோர் அவுஸ்திரேலியாவை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்காக அவர்கள் 95 ஓட்டங்களை சேர்த்தனர்.
பின்னர் அடில் ரஷித் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் இவர்களை ஆட்டமிழக்கச் செய்தனர்.
இதனால் அவுஸ்திரேலியா 22.2 ஓவர்களில் 136/4 என்ற நிலையில் இருந்தது.
பின்னர் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி உடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 146 ஓட்டம் என்ற இணைப்பாட்டத்தை உருவாக்கினார்.
பின்னர், அலெக்ஸ் கேரி 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து இங்கிலிஸ் ஓட்ட எண்ணிக்கையை துரத்தினார்.
இறுதியாக அவுஸ்திரேலியா 47.3 ஓவரில் 356 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கை கடந்தது.
இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ஓட்டங்களை எடுத்து அதிகபட்சமாக ஆட்டத்தை முடித்தார்.
மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 31 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.