ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் திங்கள்கிழமை (24) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்ட சபைக்குள் நுழைய முற்படும் போது, அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்ததால் போராட்டம் வன்முறயைாக மாறியது.
போராட்டத்தின் வீடியோக்கள், ஆர்ப்பாட்டக்கார்கள் பொலிஸ் தடுப்புகளில் ஏற முயற்சிப்பதைக் காட்டியது, சிலர் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
PTI செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, சட்டமன்ற உறுப்பினர்களான ஹரிஷ் மீனா மற்றும் முராரி மீனா, முன்னாள் அமைச்சர் பி.டி.கல்லா மற்றும் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பெப்ரவரி 21 அன்று ராஜஸ்தான் சட்டசபையில் மத்திய அரசின் ‘லக்பதி திதி’ திட்டம் குறித்த விவாதத்தின் போது, மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் அவினாஷ் கெலாட், காங்கிரஸை விமர்சித்தார்.
2023-24 வரவுசெலவுத் திட்டத்தில், எப்போதும் போல, உங்கள் பாட்டி இந்திரா காந்தியின் பெயரை இந்த திட்டத்திற்கு பெயரிட்டீர்கள் என்றும் சாடினார்.
இந்த கருத்து சபையில் உடனடி சலசலப்பை ஏற்படுத்தியது.
இது மூன்று ஒத்திவைப்புகளுக்கு வழிவகுத்தது மற்றும் மாநில கட்சி தலைவர் கோவிந்த் சிங் தோடசரா உட்பட 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யவும் வழிவகுத்தது.
இதையடுத்து, அவினாஷ் கெலாட் மன்னிப்பு கேட்கக் கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.