2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 109 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
7வது நாளாக இன்று நடைபெற்றிருந்த வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் சபையில் விவாததத்தின் போது தெரிவித்தார்.
இன்று நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.