கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான பெண் சந்தேக நபரின் தாயையும் அவரது சகோதரரையும் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேடப்படும் பெண் சந்தேகநபரான சேசத்புர தேவகே சமந்தியின் தாயாரும் அவரது இளைய சகோரரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டனர்.
இன்று அவர்கள் கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, கணேமுல்ல சஞ்சீவ சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து சந்தேக நபர்கள் முன்னரே அறிந்திருந்ததாகவும், முக்கிய தகவல்களை மறைத்துள்ளதாகவும் சிசிடி அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவியதாகக் கூறப்படும் பிரதான பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பிங்புர தேவகே இஷார செவ்வந்தி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், இலக்கம் 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடையவர்.
995892480V என்ற தேசிய அடையாள அட்டையை (NIC) கொண்டவர்.
மேலும், சந்தேக நபரை கைது செய்வதற்காக சரியான தகவல்களை வழங்கும் எவருக்கும் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணப்பரிசு வழங்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.
அனைத்து தகவல் தருபவர்களின் அடையாளங்களும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்று இலங்கை காவல்துறை உறுதியளித்துள்ளது.