அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புடன், இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (27) சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.
இரு தலைவர்களும் முன்னதாக சந்தித்திருந்த போதிலும், 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், டொனால்ட் ட்ரம்ப்பை இங்கிலாந்துப் பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் ஆறாவது தலைவர் ஸ்டார்மர் ஆவார்.
பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரேனின் வெள்ளை மாளிகை விஜயத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பயணம் அமையவுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா இடையேயான உறவை வடிவமைக்க இந்த சந்திப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மீதான அமெரிக்கத் தலைவரின் கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் உக்ரேனில் நடந்து வரும் மோதல்கள், இருதரப்பு வர்த்தக உறவுகள் தொடர்பில் இதன்போது பிரதானமாக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ரஷ்யாவுடன் உக்ரேனிய அல்லது பிற ஐரோப்பிய கூட்டாளிகள் பிரதிநிதித்துவம் இல்லாமல் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த வாரம் அமெரிக்கா உக்ரேன் போருக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டும் ஐ.நா.வின் தீர்மானங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டது.
ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் உக்ரேன் போர் தொடர்பான வெள்ளை மாளிகையின் பார்வை அட்லாண்டிக் கடல்கடந்த உறவுகளில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.