அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பொது சேவை செலவுகளைக் குறைக்க அனைத்து அரசு அலுவலகங்களையும் அரசு கட்டிடங்களுக்குள் கொண்டு வருவதன் அவசியம், பயன்படுத்தப்படாத அலுவலக உபகரணங்களை அகற்றுதல், மூடப்பட வேண்டிய, ஒன்றிணைக்கப்பட வேண்டிய மற்றும் தனியார் உரிமைக்கு மாற்றப்பட வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு, அதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
மேலும் வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை, சம்பந்தப்பட்ட பணிகளுக்கு திறம்படவும் நியாயமாகவும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொது அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசியல் அதிகாரம் செலவுகளைக் குறைத்துள்ளதால், நிர்வாகச் செலவுகளைக் குறைத்து, அரசு நிறுவனங்களில் வீண்விரயங்களைக் குறைப்பது பொதுச் சேவையின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மேலும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரச அதிகாரிகள் உரிய பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன் பொது சேவை தொடர்பில் பொதுமக்களிடம் நல்ல அணுகுமுறை இல்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொது சேவையில் உள்ள திறமையின்மையே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதன்த்ரீ மற்றும் அமைச்சு செயலாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.