ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளின் பலவீனம் காரணமாக 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வாகன உற்பத்தி மோசமான தொடக்கத்தில் இருந்தது,
கடந்த 2024 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜனவரியில் வாகன உற்பத்தி சுமார் 18% குறைந்ததாக தொழில்துறை தரவுகள் வியாழக்கிழமை (27) வெளிப்படுத்தின.
மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) தரவுகளின்படி,
ஜனவரி மாதத்திற்கான இங்கிலாந்தின் வாகன உற்பத்தியின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 17.7% குறைந்து 78,012 அலகுகளாக பதிவானது.
பயணிகள் கார் உற்பத்தி 14.3% குறைந்து 71,104 அலகுகளாகவும், வணிக வாகன உற்பத்தி 41.5% குறைந்து 6,908 அலகுகளாகவும் இருந்தது.
அதேநேரம், வாகன ஏற்றுமதி 13.4% குறைந்து 61,399 அலகுகளாகவும், உள்நாட்டு விற்பனை 30.5% குறைந்து 16,613 அலகுகளாகவும் பதிவானது.
இதனால் ஏற்றுமதியின் சதவீதம் 78.7% ஆக காணப்பட்டது.
இங்கிலாந்தின் வாகன உற்பத்தியாளர்கள் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை, சவாலான உற்பத்தி நிலைமைகள் மற்றும் சந்தை மாற்றம் ஆகியவற்றினால் கடும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
இதேவேளை, இங்கிலாந்தின் ஆடம்பர கார் தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்ட்டின் (AML.L), புதன்கிழமையன்று அதன் பணியாளர்களில் 5% ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது.
இங்கிலாந்து வாகனத் துறைக்கு உதவ அவசர அரசாங்க உதவியின் அவசியத்தையும் மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.