ஒரு புறம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்புக் களுக்காக உழைக்கும் கட்சிகள், சுயேட்சைகள். இன்னொருபுறம் ஐநாவின் 58 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளிலும் ஐநாவின் மீதான கவனக்குவிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஐநாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது.
இம்முறை ஐநா கூட்டத் தொடருக்கு இரண்டு முக்கிய புதிய பரிமாணங்கள் உண்டு. முதலாவது பரிமாணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனக்குத் தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்றும் கூறத் தொடங்கிவிட்டது. அவ்வாறு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கும் ஓர் அரசாங்கம், தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில்,இன நல்லிணக்கம் தொடர்பில் தமிழ் மக்களோடு இணைந்து செயற்படுவதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்று வெளி உலகத்திற்கு காட்ட முற்படுகின்றது.இது உள்நாட்டு நிலவரம்.
மற்றது,பிராந்திய மற்றும் உலகளாவிய நிலவரம். இலங்கையில் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஆனால் நடைமுறையில் வலது பக்கம் சாய்கின்ற ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.சீனா இந்த அரசாங்கத்தை இலகுவாகக் கையாளப்படத்தக்க ஒன்றாகக் கருதுகிறது. அது இப்பிராந்தியத்தில் இந்திய-சீன; அமெரிக்க – சீன நலன்கள் தொடர்பான ஒரு புதிய போட்டிக் களத்தைத் திறக்கப் போகின்றதா ?
மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது.அதேசமயம், புதிய அமெரிக்க அதிபராகிய ட்ரம்பின் வழமைக்கு மாறான அணுகுமுறையும் அனைத்துலக அரசியலில் புதிய தெரிவுகளையும் புதிய ரத்தச் சுற்றோட்டங்களையும் உருவாக்கக்கூடியது.
இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலில் ஐநாவின் ஐம்பத்தி எட்டாவது கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது.
ஆனால் மேற்சொன்ன அத்தனை புதிய நிலைமைகளும் இருக்கத்தக்கதாக அல்லது, புதிய திருப்பங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் இருக்கத்தக்கதாக, இலங்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஐநாவுக்குச் சென்ற அமைச்சர் விஜித ஹேரத் அங்கே ஆற்றிய உரைகளைத் தொகுத்து பார்த்தால் என்ன தெரிகிறது?
எதுவுமே மாறவில்லை.
முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே விதமான அணுகுமுறைகளைத்தான் தேசிய மக்கள் சக்தியும் கையாளப் போகிறது என்று கருதத்தக்க விதமாக அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை காணப்படுகின்றது.
அமைச்சர் தனது உரையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து உள்நாட்டுப் பொறி முறைகளை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையைப் பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டத்துக்கு ஆதரவாக அவர் எதையும் கூறவில்லை. அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான பொறி முறைக்கு ஆதரவாக அவர் எதையும் தெரிவித்திருக்கவில்லை.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மற்றொரு அமைச்சரான லால் காந்த அண்மையில் கூறியிருப்பதுபோல “அரசாங்கம்தான் மாறியிருக்கிறது. அரசு மாறவில்லை என்பது உண்மைதான். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு அப்படியே இருக்கின்றது. அக் கட்டமைப்பின் ஒரு பகுதியான அரசாங்கம் தேர்தல் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது. மாறாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் ஏனைய அடிப்படை மூலக்கூறுகளான மகா சங்கம்,படைக் கட்டமைப்பு, நீதி பரிபாலனக் கட்டமைப்பு ஆகிய ஏனைய மூன்று கட்டமைப்புகளிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் நான்கு அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்று மட்டும் மாறியிருக்கிறது. அந்த மாற்றமும்கூட தமிழ் நோக்கு நிலையில் மாற்றம் அல்ல.
எனவே இந்த அரசாங்கம் அரசுக் கொள்கையில், அரசுக் கட்டமைப்பில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தலாம்? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கொள்ளளவு புதிய அரசாங்கத்துக்கு உண்டா? அல்லது சிங்கள பவுத்த அரசுக் கட்டமைப்பு அவ்வாறான மாற்றங்களை அனுமதிக்குமா ?
இல்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரே ஐநா தொடர்பான அதன் அணுகு முறைகளை ஓரளவுக்குத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. அனுர ஜனாதிபதி வேட்பாளராக இருந்த காலகட்டத்தில் அசோசியேற்றற் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள் என்று. இங்கு உண்மை என்பது என்ன? யார் குற்றம் இழைத்தார்கள் என்று கண்டுபிடிப்பது. குற்றவாளிகளை ஏன் கண்டு பிடிக்க வேண்டும்? அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக அவர்களை தண்டிப்பதற்கா? அல்லது மன்னிப்பதற்கா? அக்குற்றங்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கு அதாவது “மீள நிகழாமைக்கு” குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமா? மன்னிக்கப்பட வேண்டுமா? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பில் குற்றங்களைத் தண்டிக்கும் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தேவையான “பொலிட்டிக்கல் வில்”லை -அரசியல் திட சித்தத்தைக்- கொண்டிருக்கின்றதா? இல்லை.
அல்லது குறைந்தபட்சம் கடந்த சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மன்னிப்புக் கேட்குமா? அதிலாவது ஒரு குறைந்தபட்ச மாற்றத்தைக் காட்டுமா?
இல்லை. அவர்கள் காட்ட மாட்டார்கள். சரியோ பிழையோ ரணில் விக்கிரமசிங்க யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் தந்திரங்கள் இருக்கலாம். ஆனால் ரணில் மன்னிப்புக் கேட்டார் என்பது ஒரு சரியான முன்னுதாரணம். அதே சமயம், தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு இழைத்த எல்லாக் குற்றங்களுக்கும் அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு மன்னிப்புக் கேட்டால் குற்றங்கள் நடந்திருப்பதை அவர் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதற்கு ரணில் தயாராக இருக்கவில்லை. இப்பொழுது தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை.லால் கந்த கூறியது போல அரசாங்கம்தான் மாறியிருக்கிறது.
இனப்பிரச்சினை தொடர்பான சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. தமிழ் கட்சிகளின் செயலின்மையால் ஐக்கியமின்மையால் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். அது சிங்கள பொது அரசு கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக் கொடுத்த வாக்குகள் அல்ல.
அரகலிய போராட்டங்கள் ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.ஆனால் வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை, என்று ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் கூறியிருக்கிறார்.அது மிகச் சரி. அரசியலறிவு வளர்ந்திருக்கலாம். ஆனால் வரலாற்று அறிவு அல்லது வரலாற்று உணர்வு வளரும் போதுதான் இறந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்ச்சி ஏற்படும். அப்பொழுதுதான் மன்னிப்புக் கேட்கலாம். மன்னிப்பு கேட்டால்தான் அடுத்த கட்டமாக குற்றங்களுக்குப் பரிகாரம் காணலாம். குற்றங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கலாம். ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் அதாவது நிலைமாறு கால நீதியின் சொற்றொடர்களில் சொன்னால் “மீள நிகழாமை”- Non recurrence.
இப்பொழுது,மீண்டும் ஐநா கூட்டத்தொடருக்கு வருவோம்.அமைச்சர் விஜித ஹேரத் ஐநாவில் ஆற்றிய உரையின்படி அவர்கள் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்தின் (30\1) அடிப்படையில் சில கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிகிறது. அல்லது சில கட்டமைப்புகளோடு அனுசரித்துப் போக முற்படுவதாகத் தெரிகிறது. ஆனால் அக்கட்டமைப்புகள் யாவும் எவை என்று பார்த்தால், உள்ளூரில் இயங்குபவை. அனைத்துலகப் பரிமாணம் குறைந்தவை. அதைவிட முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளால் நிராகரிக்கப்பட்டவை. அதாவது அமைச்சர் விஜித ஹேரத்தின் வார்த்தைகளிலேயே சொன்னால், அரசாங்கம் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை எதற்கும் தயாரில்லை. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றைத்தான் கேட்கின்றது. அதைத்தானே மகிந்தவும் கேட்டார்? அதைத்தானே ரணிலும் கேட்டார்? இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி என்ன மாற்றத்தைக் காட்டியிருக்கிறது?
புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார்.ஆனால் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியலில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மாற்றமின்மைதான் மாறாத ஒன்றா?