அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் தனது கைடயக்க தொலைபேசியின் ஹேண்ட்ஸ்ஃப்ரீ (handsfree) பயன்படுத்தி ரயில் தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாகவும் ரயிலில் ஒலி எழுப்பியும் சத்தம் கேட்கவில்லை என்றும், பின்னால் வந்த ரயிலில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன் சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருந்தவர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் காலை அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ராவஸ்திபுரம் பகுதியில் உள்ள ரயில் மார்க்கத்தில் ஸ்ராவஸ்திபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.