காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா மொஹமட் (Shama Mohamed), இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா குறித்து பெரும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரோஹித் சர்மா விளையாட்டு வீரராக குண்டாக இருக்கிறார் எனவும், அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தலைவர் எனவும் ஷாமா மொஹமட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.
ஷாமா மொஹமட்டின் கூற்றுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது.
உடனே காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த பதிவை நீக்கும்படி கூறியிருக்கிறது.
இதையடுத்து, அந்த பதிவை ஷாமா மொஹமட் நீக்கிவிட்டார்.
ஷாமா மொஹமட் நீக்கிய அவரது சமூக வலைதளப் பகுதியில்,”விளையாட்டு வீரராக பார்த்தால் ரோஹித் சர்மா உடல் பருமனுடன் இருக்கிறார். அவர் உடல் எடையை குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் தகுதியற்ற கேப்டன் ஆவார்” என பதிவிட்டிருந்தார்.
அவரின் கருத்திற்கு பாஜக தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளித்து ஒரு பயனர், ரோஹித் சர்மா உலகத் தர வீரர் என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு ஷாமா மொஹமட்,”அவரது முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர் என்று எப்படி சொல்ல முடியும்? அவர் ஒரு சாதாரணமான தலைவர், அதே போல் இந்தியாவின் தலைவராக இருக்கும் அதிர்ஷ்டம் பெற்ற ஒரு சாதாரண வீரர்” என தெரிவித்திருந்தார்.
ஷாமா மொஹமட் தொடர்ந்து ரோஹித் சர்மா குறித்து பதிவிட்டது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
பாஜக தலைவரான ராதிகா கெரா ஷாமா மொஹமட் மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டையும் கடுமையாக கண்டித்து பதிலளித்தார்.
இதற்கிடையில், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஷாமா மொஹமட்டின் கருத்துக்கள் தனிப்பட்டவை,ரோஹித் உடற்தகுதியுடன் இருக்கிறார், சிறப்பாக செயல்படுகிறார், அணியை வெற்றிகரமாக வழிநடத்துகிறார், அவரை ஒரு சிறந்த வீரர் என்று வலியுறுத்தினார்.