தென் கொரிய போர் விமானம் ஒன்று வியாழக்கிழமை (06) பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதியில் எட்டு குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வட கொரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோன் நகரில், அந் நாட்டு நேரப்படி காலை 10:04 மணிக்கு (கிரீன்விச் நேரப்படி காலை 01:04) விமானப்படை கே.எஃப்-16 விமானம் சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்தது.
வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று மாத்திரம் வெடித்ததாக நம்பப்படுகிறது.
வெடிக்காத மற்ற ஏழு குண்டுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் வெடிகுண்டு செயலிழப்பு குழு ஈடுபட்டுள்ளதாக போச்சியோன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் விளைவாக ஒரு தேவாலய கட்டிடம் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன.
விபத்து தொடர்பில் தென்கொரிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் ஒரு கட்டிடத்தின் உடைந்த ஜன்னல் மற்றும் தேவாலயத்தின் சேதமடைந்த கூரையைக் காட்டுகின்றன.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி அமெரிக்கப் படைகளுடனான கூட்டுப் பயிற்சியுடன் தொடர்புடையது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை கூட்டுப் பயிற்சிகளை நடத்த உள்ளன – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு இதுவே முதல் முறை.
வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டணி குறித்து இரு நாடுகளும் அதிகளவில் எச்சரிக்கையாக இருக்கும் நேரத்தில் இந்த பயிற்சி வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் தென் கொரியாவும் அமெரிக்காவும் நடத்திய மற்றொரு கூட்டுப் பயிற்சியின் போது, படையினர் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவின.
அது செயலிழந்து இராணுவத் தளத்தில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் மோதியது.
இது வெடிக்கவில்லை என்றாலும், அது தீப்பிடித்து எரிந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தமையும் குறுப்பிடத்தக்கது.