சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவை ஏவுவதற்கான எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) புதன்கிழமை (12) ஒத்திவைத்துள்ளது.
போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செய்த பின்னர் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதற்கான ஒரு பணியில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான மாற்றுக் குழுவினரை ஏற்றிக்கொண்டு புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டை நாசா ஏவத் திட்டமிட்டிருந்தது.
எனினும் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஏவுதல் ஹைட்ராலிக் தரைப் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருந்தாலும், அடுத்த ஏவுதல் வாய்ப்பு அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை (13) மாலை 7:26 மணிக்கு முன்னதாக (23.26 GMT) இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையின் மறுஆய்வு நிலுவையில் உள்ளது.
வியாழக்கிழமை க்ரூ-10 ஏவுதலுடன், க்ரூ-9 பணி மார்ச் 17 திங்கள் அன்று விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படும் என்றும் நாசா கூறியது.
நாசா திட்டமிட்டதை விட முன்னதாகவே வில்மோர் மற்றும் வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வருமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஆகியோர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்த பணியை இரண்டு வாரங்களுக்கு விரிவுபடுத்தியது.
அமெரிக்க கடற்படையின் சோதனை விமானிகளும், மூத்த விண்வெளி வீரர்களுமான வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோருக்கு, சுற்றுப்பாதை நிலையத்தில் எட்டு நாட்கள் தங்க திட்டமிடப்பட்டிருந்த திட்டம் தாமதமாகியுள்ளது.
கடந்த ஆண்டு அவர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பியது.