கிரீன்லாந்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. அந்த தீவு பிராந்தியத்தில் 31 அமைச்சர்களை தேர்வு செய்ய பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தேர்தல் முடிந்து வாக்கெண்ணும் பணி நேற்றே நிறைவடைந்தது. அதற்கமைய தேர்தலில் அந்த நாட்டின் எதிர்க்கட்சி கூட்டணி 51.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.
ஆளுங்கட்சி கூட்டணி 36.1 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது. வெற்றி குறித்து எதிர்க்கட்சி தலைவர் Jens-Frederik ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘முதலில் டென்மார்க்கிடம் இருந்து முழு சுதந்திரம் பெறுவோம். எங்கள் கிரீன்லாந்து மீது ஆர்வம் காட்டுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
வடத்துருவத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய தன்னாட்சி தீவு பிராந்தியமாக கிரீன்லாந்து உள்ளது. 57 ஆயிரம் பேர் மட்டும் வசிக்கும் இதன் 80 சதவீத நிலப்பகுதி பனி சூழ்ந்து வாழத்தகுதி அற்றதாக உள்ளது.
டென்மார்க் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 300 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த தீவு, 1953-ம் ஆண்டு அந்தநாட்டின் ஒருபகுதியாக அங்கீகாரம் பெற்றது.
1979-ம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தவிர்த்து பிற கொள்கைகளை கவனித்து கொள்ள தன்னாட்சி சுதந்திரம் அளிக்கப்பட்டது. அன்று முதல் கிரீன்லாந்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுக்கு அருகே ஆர்ட்டிக் பெருங்கடலில் ரஷியா மற்றும் சீனா ஆராய்ச்சி மையங்கள் அமைத்துள்ளன. கிரீன்லாந்து பனிப்பாறைகளில் யுரேனியம், இயற்கை எரிவாயு கொட்டி கிடக்கிறது. இதனால் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து கிரீன்லாந்தை வாங்க விருப்புவதாக தெரிவித்து வந்தார்.
கடந்த வாரம் அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவை. எப்படியாவது நான் அதைப் அடைந்தே தீருவேன்’ எனக்கூறி தனது லட்சியத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக ‘நீங்கள் விரும்பினால், உங்களை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம்.’ என கிரீன்லாந்து நாட்டு மக்களின் ஆசையை தூண்டிவிட்டார். ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் அரசாங்கம் பதிலடி கொடுத்தது.