ராய்ப்பூரில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) அரையிறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி. அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஷாபாஸ் நதீம் தலைமையிலான ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சு இந்தியாவுக்கு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவியது.
இப்போது அவர்கள் முதலாவது சர்வதேச மாஸ்டர் லீக் இறுதிப் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அல்லது மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸை சந்திக்க உள்ளனர்.
இந்த ஆட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) ராய்ப்பூரில் நடைபெறும்.
ராய்ப்பூரில் நேற்று நடந்த அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், சச்சின் டெண்டுல்கர், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான் போன்றவர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் விளைவாக இந்தியா மாஸ்டர்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றது.
அம்பதி ராயுடுவின் ஆரம்ப விக்கெட்டை இழந்த போதிலும், சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 42 ஓட்டங்களை எடுத்து ஒரு பெரிய இலக்கிற்கு அடித்தளம் அமைத்தார்.
இறுதியில் யுவராஜ் சிங்கின் அதிரடியான 59 ஓட்டங்களும் இலக்கினை நிர்ணயிப்பதற்கு அணிக்கு கைகொடுத்தது.
இது தவிர ஸ்டூவர்ட் பின்னி மற்றும் யூசுப் பதான் போன்றவர்கள் முறையே 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் மற்றும் 10 பந்துகளில் 23 ஓட்டங்களையும் எடுத்ததன் மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி ஓட்டத்தில் நல்ல நிலைக்கு சென்றது.
221 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஷென் வோட்சன் தலைமையிலான அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்து வீச்சில் ஷாபாஸ் நதீம் 4 விக்கெட்டுகளையும், வினேய் குமார் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தியிருந்தனர்.
ராய்ப்பூரில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியானது, மேற்கிந்தியத்தீவுகள் மார்ஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.