சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன் முறையாக வெள்ளிக்கிழமை (14) அவுன்ஸ் ஒன்றுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியது.
அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் கட்டணக் கொள்கை, பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த அச்சங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள் கணக்கிட்டு வருவதால் தங்கத்தின் விலையானது உச்சத்துக்கு சென்றுள்ளது.
வெள்ளிக்கிழைமை சந்தை அமர்வின் தொடக்கத்தில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,004.86 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.
பின்னர் மதியம் 02:01 ET (1801 GMT) நிலவரப்படி 0.1% குறைந்து 2,986.26 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,001.10 டொல்களில் முடிவடைந்தது.
வர்த்தகப் போர்களின் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பெரும்பாலும் பாதுகாப்பான புகலிடமாக நாடுகிறார்கள்.
மேலும், இந்த ஆண்டு அதன் விலை சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளின் தாக்கம் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையின் தாக்கம் குறித்த அச்சம் இதற்கு ஒரு காரணமாகும்.
தங்கத்தின் விலை மத்திய வங்கியின் தேவையால் ஆதரிக்கப்பட்டுள்ளது, முக்கிய வாங்குபவரான சீனா பெப்ரவரியில் தொடர்ந்து நான்காவது மாதமாக அதன் தங்க இருப்புக்களை அதிகரித்துள்ளது.
அமெரிக்க கொள்கை நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களின் தேவையை ஆதரிக்கக்கூடும் என்பதால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் விலை $3,100-$3,300 செல்லும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை வெள்ளி ஒரு அவுன்ஸ் $33.80 ஆகவும், பிளாட்டினம் 0.1% உயர்ந்து $995.20 ஆகவும், பல்லேடியம் 0.6% உயர்ந்து $963.76 ஆகவும் இருந்தது.
இதேவேளை, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்றைய தினம் 235,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது பவுண் ஒன்றுக்கு 217,300 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.