பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை எனவும் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் அந்நாடு ஈடுபட்டு வருகின்றது எனவும், பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது
கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக தான் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று தான் எதிர்பார்த்தாகவும், ஆனால் தன்னுடைய அமைதி முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மோடி அந்த நாடு மறைமுக போரில் ஈடுபடுகிறது எனவும், ஆனால் பாகிஸ்தான் மக்கள் அமைதியை விரும்புகின்றனர் எனவும், தீவிரவாதம், உள்நாட்டு குழப்பங்களால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர் எனவும், நிச்சயம் ஒருநாள் பாகிஸ்தான், அமைதிப் பாதைக்குத் திரும்பும் எனவும் தெரிவித்துள்ளார்.