அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, உக்ரேனில் உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்துள்ளார்.
எனினும், உக்ரேனின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை மாத்திரம் தற்காலிகமாக நிறுத்த இதன்போது ஒப்புக்கொண்டார்.
அண்மையில் சவுதி அரேபியாவில் உக்ரேனியர்களுடன் ட்ரம்பின் குழு இணைந்து மேற்கொண்ட ஒரு மாத கால விரிவான போர்நிறுத்தத்தில் கையெழுத்திட ரஷ்யத் தலைவர் மறுத்துவிட்டார்.
உக்ரேனுடனான வெளிநாட்டு இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஒரு விரிவான போர்நிறுத்தம் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரில், ஆறு மாதங்களுக்கு முன்பு உக்ரேனிய ஊடுருவலால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பகுதியை ரஷ்யா மீட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை (18) ட்ரம்ப்-புட்டினின் தெலைபேசி அழைப்பின் முடிவுகள், ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த அமெரிக்க நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு சமமானதாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இரு தலைவர்களும் மத்திய கிழக்கில் மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று ஒப்புக்கொண்டனர்.
இது தலைவர்கள் இடையேயான அழைப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே, செவ்வாயன்று பின்லாந்தின் ஹெல்சின்கிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்ட உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, எரிசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்தும் திட்டத்தை தனது நாடு ஆதரிக்கும் என்று கூறினார்.
அதேநேரம், செவ்வாய்க்கிழமை இரவு ரஷ்யா 40 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி, சுமியில் உள்ள ஒரு மருத்துவமனையையும், உக்ரேன் தலைநகரைச் சுற்றியுள்ள கெய்வ் பகுதி உட்பட பிற பகுதிகளையும் தாக்கியதாக அவர் கூறினார்.
உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் சுமார் 80% ரஷ்ய குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி கடந்த செப்டம்பரில் கூறினார்.
அதேநேரம் உக்ரேன், ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜெட்டாவில் ஒரு அமெரிக்கக் குழு உக்ரேனிய சகாக்களை சந்தித்தபோது, அவர்கள் நிலம், வான் மற்றும் கடல் முழுவதும் “உடனடி” 30 நாள் போர்நிறுத்தத்திற்கான தங்கள் முன்மொழிவை ஒப்புக்கொள்ளுமாறு கியேவை வலியுறுத்தினர்.
ஆனால், செவ்வாயன்று ட்ரம்ப்-புட்டின் அழைப்பைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையின் அறிக்கையில் கியேவ் உடனான அந்த ஒப்பந்தம் பற்றி எந்த புதிப்பிப்பு தகவலும் இல்லை.