ஐரோப்பிய தயாரிப்புகள் மீதான அமெரிக்க வரிகள் லம்போர்கினியின் வருவாயைப் பாதிக்கக்கூடும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
வோக்ஸ்வாகன் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனம், தனது வருவாய் கடந்த ஆண்டை விட 16% அதிகரித்து 3.09 பில்லியன் யூரோக்களாக (3.31 பில்லியன் டொலர்) உயர்ந்துள்ளதாகவும், அதேநேரத்தில் அதன் இயக்க இலாபம் 15.5% அதிகரித்து 835 மில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளதாகவும், முதல் முறையாக 800 மில்லியன் யூரோக்களைத் தாண்டியுள்ளதாகவும் வியாழக்கிழமை (20) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், லம்போர்கினியின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் வின்கெல்மேன் கூறுகையில்,
நிறுவனத்திடம் இப்போது 18 மாதங்களுக்கான ஆர்டர்கள் உள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் அதைப் பாதுகாப்பதும், அதனை மேலும் அதிகரிப்பதும் எமது நோக்கம்.
ஏனெனில் அமெரிக்க வரிகள் ஏற்கனவே சுருங்கி வரும் ஆடம்பர சந்தைக்கு மேலும் நிச்சயமற்ற தன்மையை சேர்க்கக்கூடும் என்றார்.
லம்போர்கினி கடந்த ஆண்டு 10,687 வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.
அதன் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் சுமார் 3,000 யூனிட்கள் விற்பனையாகின.
லம்போர்கினியின் வளர்ச்சியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,000 புதிய பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், நிறுவனத்தின் நேரடி பணியாளர்களில் 30% அதிகரிப்பு உள்ளது.
இதனிடையே, வோக்ஸ்வாகனுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் சொகுசு வாகன உற்பத்தியாளரான பென்ட்லி, புதன்கிழமை, 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் தாக்கியதிலிருந்து மிகக் குறைந்த வருடாந்திர வருவாயைப் பதிவு செய்தது.
2029 ஆம் ஆண்டில் தனது முதல் முழு மின்சார மொடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள லம்போர்கினி, இப்போது முற்றிலும் கலப்பின மூன்று மொடல் வரிசையைக் கொண்டுள்ளது.
இதில் Urus SE SUV, ரெவெல்டோ ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் புதிய டெமெராரியோ ஸ்போர்ட்ஸ் கார் ஆகியவை அடங்கும்.
இதன் முதல் விநியோகங்கள் இந்த ஆண்டு இறுதிக்கும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கும் இடையில் எதிர்பார்க்கப்படுகின்றன.
லம்போர்கினி கார்களுக்கான விற்பனை விலைகள் 260,000 யூரோக்களுக்கு மேல் தொடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.