எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வந்து செல்வர். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், வீட்டின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியார் வீட்டின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அதிர்ச்சியடைந்த காப்பாளர் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தார்.
இதனையடுத்து எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு வீட்டுக்குச் சென்று பார்வையிட்டதோடு மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியாா் வீட்டுக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரதி பிறந்த இல்லத்தை பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், மகாகவி பாரதியார் பிறந்த வீடு, முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மகாகவியின் புரட்சி வேள்வியின் கனலை அந்த இல்லத்தில் இன்னும் உணர முடிகிறது என்றும், அத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தைப் பராமரிக்காமல், இன்று இடிந்து விழும் அளவுக்குக் கொண்டு சென்றிருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.