தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தானது நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீக்கான சாதனைப் புத்தகங்களை மீண்டும் எழுதுகின்றன என்று தென்கொரியாவின் தற்காலிகத் தலைவர் ஹான் டக்-சூ கூறினார்.
காட்டுத் தீயினை அடுத்து 23,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல பாரம்பரிய கலாச்சார தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் அழிக்கப்பட்டது.
புதன்கிழமை (26) நண்பகலுக்குப் பின்னர் உய்சோங் கவுண்டியின் மலைகளில் தீயணைப்பு ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், விபத்துக்கான காரணத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் சுமார் 5,000 இராணுவ வீரர்களும் பல தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
செவ்வாயன்று (25) தேசிய தீயணைப்பு நிறுவனம், நெருக்கடியை மிக உயர்ந்த தீயணைப்பு நடவடிக்கை நிலைக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறியது.
இந்த ஆண்டு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
தென் கொரியாவில் காட்டுத்தீ ஒப்பீட்டளவில் அரிதானது, மேலும் அது தொடர்பான உயிரிழப்புகள் அரிதானவை.
கடந்த சில நாட்களுக்குள் 18 பேரைக் கொன்ற தற்போதைய தீ விபத்துகள், நாட்டின் வரலாற்றில் மிகவும் கொடியவை.
சுமார் 17,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, இது தென் கொரியாவின் வரலாற்றில் பரப்பளவில் மூன்றாவது பெரிய தீ விபத்து ஆகும்.
உய்சோங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், மாகாணத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான கி.பி 618 இல் கட்டப்பட்ட கவுன்சா கோயில் எரிந்தது.
ஜோசோன் வம்சத்தின் (1392-1910) தேசிய புதையலாகக் கருதப்பட்ட ஒரு புத்த கட்டிடக்கலை அமைப்பும் அழிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அனைத்து பணியாளர்களும் உபகரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்காலிகத் தலைவர் ஹான் கூறினார், ஆனால் பலத்த காற்று தொடர்ந்து மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.
தென் கொரியாவில் சராசரியை விட குறைவான மழைப்பொழிவுடன், இயல்பை விட வறண்ட சூழல் நிலவுகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே 244 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன – கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 2.4 மடங்கு அதிகம்.
காட்டுத்தீக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான சட்டவிரோத எரிப்புக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்துவதாகவும், தனிநபர் கவனக்குறைவைத் தடுப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது.
காட்டுத்தீ முதன்முதலில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தென்கிழக்கில் உள்ள சான்சியோங் கவுண்டியில் வெடித்தது.
ஆனால் தற்சமயம் அண்டை நகரங்களான உய்சோங், அன்டோங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது.