மியன்மாரில் ஏற்பட்டுள்ள பாரிய நில அதிர்வை தொடர்ந்து அங்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் இருவேறு சந்தர்ப்பங்களில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி பாரிய நில அதிரவு ஏற்பட்டிருந்த நிலையில் சுமார் 72 மணித்தியாலங்களில் 1 700க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெறும் பகுதிகளில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே மியன்மாரில் ஏற்பட்ட நிலஅதிர்வை தொடர்ந்து தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளதுடன் அங்கு சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பாங்கொக் நகரின் மிக உயரமான கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கு சிக்குண்டுள்ள கட்டுமானத்தொழிலாளர்கள் 76 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.
நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற்றுவருவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் தற்போது வெப்பமான காலநிலை காரணமாக குறிப்பாக குடிநீர் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மியன்மாரில் மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.