2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியானது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 19 ஆவது போட்டியான இது இன்றிரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் SRH அணி ஏமாற்றமளிக்கும் வகையில் தோல்வியடைந்தது.
அங்கு அவர்கள் 201 என்ற இலக்கை துரத்தத் தவறி 120 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் பந்துவீச்சு தாக்குதல் சன்ரைசர்ஸ் அணியை சேஸ் முழுவதும் பின்தங்க வைத்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில், வெங்கடேஷ் ஐயர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் KKR அணிக்கு போட்டித்தன்மை வாய்ந்த ஸ்கோரைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
முதல் மூன்று போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன், SRH தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மறுபுறம், ஷுப்மான் கில் தலைமையிலான GT அணி, ஆக்ரோஷமான கிரிக்கெட் பாணியை வெளிப்படுத்தியுள்ளது.
தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்த போதிலும், 2022 சாம்பியன்கள் தங்கள் கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர்.
இந்த சீசனின் இரண்டாவது வெளி மைதான ஆட்டத்தை அவர்கள் விளையாடும்போது, டைட்டன்ஸ் அணி தங்கள் வெற்றிப் பயணத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், சன்ரைசர்ஸை தோற்கடிக்கவும் ஆர்வமாக இருக்கும்.
ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் 5 தடவைகள் இதுவரை ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் SRH அணி ஒரு வெற்றியையும், GT மூன்று வெற்றியையும் பதிவு செய்துள்ளன.
ஒரு போட்டி எவ்வித முடிவின்றியும் கைவிடப்பட்டுள்ளது.