ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளைப் பதிவு செய்த சென்னை அணி நேற்றைய போட்டியுடன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 30ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வீழ்த்தி 5 விக்கெட்களால் சென்னை அணி வெற்றியீட்டியது.
ஷிவம் டுபே, எம்.எஸ். தோனி பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 57 ஓட்டங்களே சென்னை சுப்பர் கிங்சின் வெற்றியை உறுதி செய்தது. எனினும், சென்னை சுப்பர் கிங்ஸ் 4 புள்ளிகளுடன் தொடர்ந்தும் கடைசி இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. சென்ளை அணி சார்பாக பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 74ஆக இருந்தபோது ரச்சின் ரவிந்த்ரா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் எம்.எஸ். தோனி 11 பந்துகளில் 4 பவுண்டறிகள். ஒரு சிக்ஸ் உட்பட 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காது வெற்றியை உறுதி செய்தார்.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.எஸ். தோனி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.