பல மாதங்களாக நடைபெற்ற பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் உக்ரேனும், அமெரிக்காவும் புதன்கிழமை (ஏப்ரல் 30) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட உக்ரேனிய கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ரஷ்யாவுடனான போரிலிருந்து உக்ரேனின் பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்காக ஒரு மறுகட்டமைப்பு முதலீட்டு நிதியை நிறுவ இரு நாடுகளும் இந்த ஒப்பந்தம் மூலமாக ஒப்புக் கொண்டுள்ளன.
உக்ரேனில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர் என்பதை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அதேநேரம், அமெரிக்க இராணுவ உதவியைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானதாகக் கருதப்படுகிறது என்று உக்ரேன் கூறியுள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தம் குறித்து ரஷ்யா இன்னும் பதிலளிக்கவில்லை.
உக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம் மற்றும் லித்தியம் போன்ற முக்கியமான கனிமங்கள் அதிக அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இராணுவ பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவற்றின் பயன்பாடு காரணமாக அவை மிகவும் பெறுமதி மிக்கதாக கருதப்படுகின்றன.
அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.