கடந்த ஏப்ரல் 22 ஆம் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் மூன்று இடங்களில் உளவு பார்த்ததாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிகளில் ஒருவர் பஹல்காமில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை ஆய்வு செய்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அதிகரித்ததால் அந்த இடத்தைத் தாக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் அதி-நிலை தொடர்பு அமைப்பைப் பயன்படுத்தி தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்த அமைப்பு பயங்கரவாதிகள் சிம் கார்டைப் பயன்படுத்தாமல் தொடர்பு கொள்ளவும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனுமதிக்கிறது,
இது குறுகிய தூர, பாதுகாப்பான தகவல்தொடர்புக்கு உதவுகிறது.
தாக்குதலின் போது இந்த அமைப்பிலிருந்து இரண்டு சமிக்ஞைகள் அந்தப் பகுதியில் கண்டறியப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது ஐந்து முதல் ஆறு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
‘மினி சுவிட்சர்லாந்து’ என்றும் அழைக்கப்படும் இந்தப் புல்வெளியை கால்நடையாகவோ அல்லது குதிரையின் மூலமாகவோ மட்டுமே பயணிகள் அடைய முடியும்.
பஹல்காம் படுகொலை சமீபத்திய ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான பொதுமக்கள் தாக்குதல்களில் ஒன்றாகும்.
லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front ) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம், பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை திறம்பட குறைத்தல், முக்கிய எல்லைப் பாதைகளை மூடுதல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துதல் மற்றும் புது டெல்லியல் உள்ள அதன் உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான விரிவான இராஜதந்திர மற்றும் மூலோபாய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.