காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.
காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் குறையாதவை அடர் காடுகள், திறந்த வெளிச் சதுப்பு நிலங்கள், குளங்கள், ஆறுகள்,நீர்த் துளைகள்,வண்டில் பாதைகள்…என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆறுகள், குளங்கள், அடர் காடுகள்,சிறுகாடுகள் சதுப்பு நிலங்கள், வண்டில்பாதைகள் போன்றவற்றுக்கு யார் யார் உரிமை கோருவார்கள்?
மூன்று தசாப்தங்களுக்கு மேலான யுத்தம் ஈழத் தமிழர்களை ஆவணம் காவிகளாக மாற்றியது.ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும்,ஏன் புலப்பெயர்ச்சியின் போதும் கூட, ஈழத் தமிழர்கள் ஆவணங்களைக் காவுகின்றார்கள்.இறுதிக் கட்டப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்தவர்களுக்கு ஐநா முதலில் வழங்கிய பொருட்களில் ஒன்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பிளாஸ்டிக் ஃபைல் பைகள் ஆகும். எனினும் இடப்பெயர்வின் அகோரம் காரணமாக ஈழத் தமிழர்கள் எல்லா ஆவணங்களையும் காவ முடிந்ததில்லை. இறுதிக் கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தவர்கள் பலரிடம் அவர்களுடைய வீட்டில் நடந்த நல்லவைகள் கெட்டவைகள் தொடர்பான ஒளிப்பட ஆல்பங்கள் அனேகமாக இல்லை.
ஒரு பகுதியினரிடம் தமது தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இல்லை. தொடர்ச்சியான இடப்பெயர்களின் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதா அல்லது ஆவணப் பையைக் காவுதா என்று கேள்வி வரும் பொழுது, ஆவணங்கள் கைவிடப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்பட்ட ஆவணங்களில் காணி உறுதிகளும் உட்பட காணி தொடர்பான ஆவணங்கள் பல அடங்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெயர்வுக்கு உள்ளான ஒரு மக்களிடம் காணி தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமது உரித்தை நிரூபிக்குமாறு மேற்சொன்ன வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டது போல கோவகணத்தோடு வந்த மக்களிடம் காணி உறுதி உண்டா என்று கேட்கும் வர்த்தமானி அது.
ஒருபுறம் இடப்பெயர்ச்சி, புலப்பெயர்ச்சி காரணமாக தமிழ்க் கிராமங்களும் வாழிடங்களும் இடம் மாறியுள்ளன. ஒரு பகுதி தமிழர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி வரும். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் பலருடைய காணிகளை அவர்கள் பராமரிப்பது இல்லை. நாட்டில் உள்ள உறவினர்கள் சிலர் பராமரிக்கிறார்கள். ஆனால் அதுவும் இப்பொழுது பல இடங்களில் சிக்கலாகி நீதிமன்றம் வரை வந்துவிட்டது. காணிகளைப் பராமரிக்கும் இரத்த உரித்துச் சொந்தங்களே அந்த காணிகளை அபகரிக்க முற்பட்டு அதனால் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொந்தச் சகோதரர்களின் காணிகளை அபகரிக்க முற்படும் வழக்குகளும் இதில் அடங்கும்.
புலம்பெயர்ந்த நாட்டில் செற்றில் ஆகிவிட்ட தமது உறவினர்கள் திரும்ப வரப்போவதில்லை, திரும்பி வந்து காணிகளையும் வீடுகளையும் ஆண்டு அனுபவிக்கப் போவதில்லை என்பதனால் அவற்றை நாங்கள் திருடினால் என்ன அபகரித்தால் என்ன என்று இங்குள்ள ஒரு பகுதி சொந்தங்கள் சிந்திக்கின்றன. இது தமிழ்ச் சமூகத்தின் சீரழிந்த பகுதிகளில் ஒன்று. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மேற்சொன்ன அரச வர்த்தமானியானது 5940 காணிகளை மூன்று மாத கால அவகாசத்துக்குள் உரிய ஆவணங்களோடு வந்து உரிமை கோருமாறு அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் ஒரு காணி விடுவிப்பு நிகழ்வின் போது ஒரு படைத்தளபதி பேசிய விடயத்தை ஒரு சமயப் பெரியார் எனக்குச் சுட்டிக் காட்டினார். அந்தத் தளபதி கூறினாராம், தமிழர்கள் காணிகளை விடுவிக்குமாறு போராடுகிறார்கள். ஆனால் விடுவித்த காணிகளில் வந்து குடியமர்வது குறைவு என்று.
ஆனால் பலாலி என்ற கிராமமே இப்பொழுது வரைபடத்தில் மட்டும் தான் உண்டு,அது நடைமுறையில் இல்லை என்று பலாலியில் பிறந்தவர்களும் பலாலியில் வாழ்ந்தவர்களும் கூறுகிறார்கள். ஏனென்றால் அது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு படைத்தளத்தின் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. வடக்கு கிழக்கில் உள்ள கணிசமான படைத்தளங்கள் தனியார் காணிகளையும் சுவீகரித்துக் கட்டி எழுப்பப்பட்டவைதான்.
ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் முக்கிய ஐந்து அம்சங்களில் ஒன்று தாயகம்.பாரம்பரிய தாயகம். அதாவது நிலம். அந்த நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் ஒரு மக்கள் கூட்டம் தேசமாகவே இருக்க முடியாது.நிலம் இல்லையென்றால் கடல் இல்லை. நிலமும் கடலும் இல்லையென்றால் சனமும் இல்லை. எனவே நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவது;பேணுவது என்பது அரசியல் அதிகாரத்தின் பிரதான பகுதி.
இலங்கை அரசாங்கம் காணிகளை, அளந்தாலோ அல்லது காணிகள் தொடர்பான விவரங்களை ஒரு மையத்தில் சேகரிக்க முற்பட்டாலோ தமிழ் மக்கள் அதைக் கண்டு அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் உரித்தாளர் இல்லாத காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கலாம் என்ற பயம். தமது மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி புலம்பெயர்ந்திருக்கும் ஒரு பின்னணியில்,ஈழத் தமிழர்களிடம் அப்படிப்பட்ட அச்சம் எழுவது இயல்பானதே. ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் மாகாணங்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட காணி அதிகாரத்தின் கீழ்,நிலப் பறிப்புக்கு எதிராகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் நியாயமான பயம் அது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக அமெரிக்காவின் மில்லீனியம் உதவித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த உதவி திட்டத்தின்படி பெருமளவு நிதியை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கப் தயாராக இருந்தது. அது கடன் அல்ல, தானம். ஆனால் அதற்காக அமெரிக்கா நாட்டின் கேந்திரமான பகுதிகள் சிலவற்றின் நிலம் தொடர்பான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஆவணங்களைத் தருமாறு கேட்டது. அவ்வாறு ஒர் உதவித் திட்டத்துக்காக உதவியைப் பெறும் நாட்டின் நிலம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களைக் கேட்பது சரியா? என்று ஒர் ஊடகவியலாளர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரைக் கேட்டபொழுது, அவர் சொன்னாராம், ஏன், அதில் என்ன தவறு? என்று. பின்னர் அந்தத் திட்டத்தை கோத்தாபய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணம் என்று ரணிலின் ஆதரவாளர்கள் முன்பு கூறி வந்தார்கள்.
அதாவது ஓர் உலகப் பேரரசு, சிறிய நாடு ஒன்றுக்கு உதவி செய்யும் பொழுது அந்த நாட்டின் நிலம் தொடர்பான ஆவணங்களை தன் கையில் வைத்திருக்க விரும்புகிறது என்றால், அந்த உதவிக்கு பதிலாக நிலத்தை தன் கண்காணிப்புக்குள் வைத்திருக்க விரும்புகிறது என்று பொருள்.
1998 இல் அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் ‘பிம்சவிய’ என்ற பெயரில் காணி உரித்து பதிவுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. நாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணி உரித்துக்களை உறுதிப்படுத்தி புதிய, ஒரே ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட ஆவணத்தைப் பெற வேண்டும் என்று பிம்சவிய திட்டம் அறிவுறுத்தியது.
இப்படிப்பட்டதோர் உலகளாவிய மட்டும் உள்ளூர் அரசியல் பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு தேவையான ஆகப் பிந்திய பிடியைக் கொடுத்திருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மாதக் கடைசியிலும் மே மாதத்தின் தொடக்கத்திலும் இந்த விடயம் சூடான பேசுபொருளாக மாறியது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி மார்ச் 28. ஆனால் அது தமிழ் அரசியலில் சூடான பேசு பொருளாக மாறியது ஏப்ரல் கடைசியில். அதை தலைப்புச் செய்தியாக மாற்றியவர் சர்ச்சைக்குரிய விடையங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஊடகவியலாளர்களில் ஒருவர்.முன்பு யாழ் மாநகர சபையின் உறுப்பினராக இருந்தவர்.கெட்டிக்காரர்.அவர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்று ஒர் அபிப்பிராயம் பரவலாக உண்டு.
அது உண்மையோ பொய்யோ, அந்த வர்த்தமானியை வைத்து சுமந்திரன் தன்னை தமிழ் அரசியலிலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பலப்படுத்தி வருகிறார். அந்த வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையிலும் அவர் கால அவகாசம் வழங்கியுள்ளார். இந்த விடயத்தை அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டமாக மாற்றப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.இந்த விடயத்தில், நிலப் பறிப்பு தொடர்பில் சுமந்திரனின் நடவடிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துபவை.
தேசிய மக்கள் சக்திக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை மேற் சொன்ன வர்த்தமானி ஒன்றாக்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் அதை ஒரு பேசு பொருளாக மாற்றினார்கள்.அதன் விளைவாக அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் இருந்து ஓரளவுக்குக் கீழிறங்கி வந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி இது சம்பந்தமாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார். சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய காணிகளை சுவிகரிக்கும் உள்நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறியுள்ளார்.எனினும் குறிப்பிட்ட வர்த்தமானி இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் மீளப் பெறப்படவில்லை. அடுத்த அமைச்சரவைக்கு கூட்டத்தில் அது தொடர்பில் பேசி முடிவெடுக்கப் போவதாக ஹரிணி கூறியுள்ளார்.














