அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் முன்மொழிந்த “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளார்.
மேலும், அந்த செயல்பாட்டில் தனது இணைப்பு அச்சுறுத்தலையும் புதுப்பித்துள்ளார்.
இது குறித்து செவ்வாயன்று (27) சமூக தளத்தில் டரம்ப் இட்ட பதிவில்,
அவர்கள் (கனடா) ஒரு தனி தேசமாக இருந்தால், கோல்டன் டோமில் சேர கனடாவுக்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
ஆனால், அவர்கள் எங்கள் நேசத்துக்குரிய 51 ஆவது மாநிலமாக மாறினால் அவ்வாறு எந்த செலவும் இருக்காது என்று கூறினார்.
கனடா இந்த சலுகையை “பரிசீலனை செய்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.
கனடாவின் இறையாண்மையை வலியுறுத்திய மன்னர் சார்லஸ், நாடாளுமன்றத்தில் அரியணை உரை நிகழ்த்திய அதே நாளில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும், பிரதமர் மார்க் கார்னி தனது அரசாங்கத்தை ஒரு பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் சேர உறுதியளித்தார்.
கடந்த வாரம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கான திட்டங்களை வெளியிட்டார்.
இது 175 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, பல அடுக்கு அமைப்பாகும், இது முதல் முறையாக அமெரிக்க ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும்.
ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், இந்த அமைப்பு 2029 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும், “அவை விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட” ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
கோல்டன் டோம் திட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒப்புக்கொண்டுள்ளார்.
கனடாவிற்கு இது நல்ல யோசனையா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆம், கனடியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது நல்லது என்று கடந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கார்னி கூறினார்.
இருப்பினும், கனடா இன்னும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், கனடாவின் இறையாண்மை “விற்பனைக்கு இல்லை” என்று ட்ரம்பின் முன்னிலையில் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.