தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது.
அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சென்னை நீதிமன்றம் தனது உத்தரவில் இன்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் சம்பவத்தை வீடியோ எடுத்து இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
ஞானசேகரன் கைது செய்யப்பட்ட உடனேயே, அவர் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.
இது ஒரு அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
ஆரம்பத்தில் திமுக இவருடனான எந்தத் தொடர்பையும் மறுத்தாலும், எதிர்க்கட்சிகள் அவர் கட்சியில் ஒரு பதவியில் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஆதாரங்களையும் வெளியிட்டன.
ஞானசேகரன் திமுக மாணவர் பிரிவு நிர்வாகி என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.
தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இந்தக் கூற்றுக்களை மறுத்து, ஞானசேகரன் கட்சி நிர்வாகி அல்ல என்று கூறினார்.
முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினும் சட்டமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் திமுக உறுப்பினர் இல்லை என்றாலும், அவர் உண்மையில் ஒரு ஆதரவாளர் என்று தெளிவுபடுத்தினார்.
ஞானசேகரன் முன்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார்.
அதேநேரம், தமிழ்நாடு காவல்துறை எதிர் மனு தாக்கல் செய்தது, இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன.
சென்னை மேல் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.
பின்னர் SIT மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தனது தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததைக் காரணம் காட்டி, தண்டனையில் கருணை காட்ட வேண்டும் என்று அவர் இப்போது கோரியுள்ளார்.
ஜூன் 2 ஆம் திகதி நீதிமன்றம் தண்டனை தொடர்பான விவரங்களை அறிவிக்கும்.














