உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது.
இத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணக்கம் தெரிவித்திருந்தன.
இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு அஜித் பி பெரேராவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













